அரசியல்வாதிகள் மன்னிப்புக் கேட்பது மிகமிக அரிது. அப்படியொரு மன்னிப்பைக் கேட்டிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால் அது கிளப்பிவிட்டிருக்கும் பூதம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது!
மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பேசுகையில் திண்டுக்கல் சீனிவாசன், “ அப்பல்லோவில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியது பொய். ஜெயலலிதா இதைச் சாப்பிட்டார், அதைச் சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியதற்கு எங்களை மன்னித்து விடுங்கள். அவர் மருத்துவமனையில் இருந்தபோது நாங்கள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. சசிகலா தரப்பில் என்ன சொன்னார்களோ அதையே நாங்களும் தெரிவித்தோம்,” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். அரசியலில் வெளிப்படையாகப் பேசுவது உண்டுதான். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகவா என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் களத்தில் குதித்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
“நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தோம்” என்று அவர் சொல்ல இப்போது யார் சொல்வது உண்மை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் “எந்த அமைச்சர் களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை, கவர்னர் வந்து பார்க்கும் போது கூட ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை. கட்டை விரலை உயர்த்திக்காட்டியதாக கூறியவை அனைத்தும் பொய்” என சொல்லிவிட்டார். இந்த குழப்பங்களுக்கு இடையே முன்னாள் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துவிட்டார். இத்துடன் ஓபிஎஸ் அணி இணைவதற்காக விதித்த அனைத்து நிபந்தனைகளையும் எடப்பாடி நிறைவேற்றிவிட்டார் என்றே கொள்ளலாம்!
ஆனால் ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டதிலிருந்து மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டவரையில் நடந்த விஷயங்களில் எவ்வளவு உண்மை வெளியே சொல்லப்பட்டது? அதில் யார் யாருக்குப் பங்கு உள்ளது?
கவர்னர்கூடப் போய்ப் பார்த்துவிட்டு உண்மை சொல்லவில்லையா? மத்திய அரசு அனுப்பிய எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையும் தவறானதா? குறைந்தபட்சம் ஒரு அமைச்சருக்குக்கூடவா அப்போது உண்மை சொல்ல துணிச்சல் இல்லாமல் போய்விட்டது? நாட்டின் மிகமுக்கியமான செல்வாக்கு மிக்க முதல்வருக்கு சிகிச்சை நடக்கிறது. அதில்கூடவா ஒளிவு மறைவுகள் இருக்கமுடியும் என்ற கேள்விகள் ஜெயலலிதா இறந்த உடனேயே எழுந்தன. அவை தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் பெரிதாக எழுந்துள்ளன.
ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட தினத்தில் இருந்து ஓராண்டு கழிந்த நிலையில் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. எழுபத்தி ஐந்து நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில் அவரைப் பார்ப்பதற்காகப் போன அனைவருமே அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.
சசிகலாவைத் தாண்டி ஏதும் செய்யமுடியாத நிலையை, அவர் சொல்லை மீற முடியாமலிருந்தோம் என்று அவர்மீது சுமையைப் போட்டுவிட்டு அனைவரும் தப்பிக்கும் முயற்சிதான் இது!
ஜெ. உடல்நலம் இன்றி இருந்தபோது கவர்னர் ஜெ.வின் ஆலோசனையின் பேரில் அவரது இலாக்காக்களை ஓ.பி.எஸுக்கு அளித்தார். ஆனால் கவர்னரின் இந்த அறிவிப்புமே கூட இப்போது கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. யாருமே ஜெ.வைப் பார்க்கவில்லை என்றால் கவர்னர் எப்படி அறிவிக்கமுடியும்?
இடைத் தேர்தல் படிவத்தில் ஜெ.கையெழுத்திட்டது காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் அதிகாரிகளுடன் பேசியது என்று பல விஷயங்கள் கேள்விக்குரியனவாகவே இருக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் செய்த தியானப்புரட்சியில் தன்னை ஜெயலலிதாவைப் பார்க்கவே விடவில்லை என்று சொன்னார். அதுதான் இன்று திண்டுக்கல் சீனிவாசனின் மன்னிப்பில் வந்து முடிந்து விசாரணை ஆணையமாகப் பரிணமித்திருக்கிறது. இந்தப் பிரச்னையில் அப்போதைய மத்திய அமைச்சரும் இப்பொதைய துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவையும் இவர்கள் கேள்விக்குரியவர் ஆக்குகிறார்கள். அப்பல்லோவில் ஜெயலலிதா முன்னேற்றம் அடைகிறார் என்று சொன்னவர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்ல, ஜெ. மரண அறிவிப்பு அன்று மருத்துவமனையில் உடனிருந்து ஆட்சிப்பொறுப்பு சுமுகமாக பன்னீர் செல்வம் கையில் செல்வதை பார்த்துக்கொண்டவரும் இவர்தான். மத்திய அரசின் பிரதிநிதியாக இறுதிச் சடங்குகளை அவரே வழிநடத்திச் சென்றார். இவர்கள் யாரும் வாய் திறக்காத நிலையில் மாநில அமைச்சர்கள் குற்றம் சாட்டுவது ஏன்?
அன்று திமுக தலைவர் கருணாநிதி, ஜெ. புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டபோது அவரைத் திட்டித் தீர்த்தவர்கள் இதே அதிமுகவினர்தான்!
ஆனால் இப்படி ஆளாளுக்குக் குற்றம் சாட்டுவதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள்? சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைப்பது என்றாலும் கூட அ.தி.மு.க என்ற கட்சியின் நம்பகத்தன்மையையும் அல்லவா இந்தப் பேச்சுகள் வீழ்ச்சியடையவே செய்கின்றன.
தன் மரணத்தின் மீது நடக்கும் இந்த அரசியலால் கடற்கரையில் ஜெ.வால் நிம்மதியாக உறங்க இயலாது. ஜெவின் உயிர்த் தொண்டர்களும் உறங்காமல் விழித்திருக்கிறார்கள்! இதனிடையே உண்மையும் எங்கோ விழித்திருக்கிறது!
அக்டோபர், 2017.